ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசை,  மத்தியில் ஆளும் பாஜக தான் இயக்கி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கேற்றார்போல் ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு எடப்பாடி அரசு பச்சைக் கொடி காட்டியது. இதற்கு அதிமுக தொண்டர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது அதிமுக-பாஜக இடையே சரியான புரிதல் இல்லை என்று கூறப்படுகிறது. அதுவும் ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க முயன்றபோது, அவர் பார்க்க மறுத்துவிட்டது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மாறாத ரணமாகிக் கிடக்கிறது.

இது கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் எதிரொலித்தது. தேசிய கட்சிகளான காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் நம்மை அண்டியே இருந்தன.

ஆனால் தற்போது அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டுக் கிடப்பதாக பலர்  கொந்தளித்தனர். என்னதான் இருந்தாலும் தமிழக நலனுக்காக  மத்திய அரசுக்கு அடங்கி நடந்தாலும், நமது சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என உறுப்பினர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இதில் ஒரு படி மேலே போய் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் பாஜகவுக்கு சரியான பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக மூலம் காலூன்ற முயற்சி செய்து வரும் பாஜக, அதிமுகவை கைக்குள் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதனுடன் கூட்டணி அமைக்கலாம் என பிளான் பண்ணி வருவதால் அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கோ, இணைப்பதற்கோ வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் கூட்டணியை அதிமுகதான் முடிவு செய்யும் என்றும் ஓபிஎஸ் கூறியிருப்பது பாஜகவை மனதில் வைத்துதான் என்ற கருத்து நிலவுகிறது.