சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் 219-வது குருபூஜை விழாவையொட்டி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களது சிலைக்கு துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார்.

தமிழர் இனம் காக்க ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து தீரத்துடன் போராடி தன்னுயிர் நீத்து, தன்மானம் காத்த வீரத்தமிழர்களான மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம். மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் சிலைக்கு மாண்புமிகு துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 அதனைத் தொடர்ந்து மருதிருவரின் மக்கள் களம் மற்றும் மருது சித்தர்கள் ஆன்மிக சபை சார்பில் நடைபெற்ற அன்னதான விழாவையும், அவர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.