மேலூர் கூட்டத்தை வைத்து டிடிவிக்கு ஆதரவு உள்ளதாக எடைபோட முடியாது என்றும், டிடிவியின் செல்வாக்கிற்காக திரண்ட கூட்டம் அல்ல என்றும் செல்வத்துக்காக திரண்ட கூட்டம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாணிக்கம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் மதுரை மாவட்டம், மேலூரில் நேற்று கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அணிகளாக பிளவுபட்ட அதிமுக இணைப்பு நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். 

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனின் மோதல் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன், பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருப்பார் என்றும் கூறியிருந்தார்.

டிடிவி தினகரன் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், மீனாட்சி அம்மன் கோயிலில், டிடிவி தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கோயிலில் டிடிவி தினகரனை சந்தித்ததாக கூறுவது தவறு என்று மாணிக்கம் எம்.எல்.ஏ., மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

டிடிவி தினகரன் நடத்திய மதுரை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர் ஒருவர், மாணிக்கம் எம்.எல்.ஏ.விடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், மேலூர் கூட்டத்தை வைத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு உள்ளதாக எடைபோட முடியாது என்று கூறினார். இந்த கூட்டம் தினகரனின் செல்வாக்கிற்காக திரண்ட கூட்டம் அல்ல என்றும், இது செல்வத்துக்காக திரண்ட கூட்டம் என்றும் மாணிக்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

டிடிவி தினகரனை சந்தித்ததாக கூறுவது தவறு என்றும், டிடிவியை வாழ்நாளில் சந்திக்கவே மாட்டேன் என்றும் அவரை சந்திக்கும் எண்ணமும் இல்லை என்றும் மாணிக்கம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திடம் சிக்கிவிடக் கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார் என்றும் மாணிக்கம் எம்.எல்.ஏ. கூறினார்.