ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்?

சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆருக்கு பிறகு யாரும் இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெறாத நிலையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்டு எய்ம்ஸ் உள்ளிட்ட லண்டர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்த போதும் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவே அதிர்ச்சி அடைய செய்தது. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். 

ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பு

இதனால் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன நிலையில் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணி இணைந்தது. இணைப்பில் முக்கிய கோரிக்கையான ஜெயலிதா மரணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு ஆறுமுகசாமி ஆணையம் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணை ஆணையத்தில் 140க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக ஜெயலிதாவின் உதவியாளர்கள், சமையலர்கள், பாதுகாவலர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தியது ஆறுமுகசாமி ஆணையம், இதனையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் தங்களை குற்றம்சாட்டுவது போல் விசாரணை நடை பெறுவதாக கூறி ஆணையம் செயல்பாட்டியிற்கு தடை வாங்கியது அப்பல்லோ மருத்துவமனை.

ஓபிஎஸ் ஆஜர்?

இதனைதொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். இந்தநிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் உரியமுறையில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் ஆறுமுக ஆணையம் விசாரணையை தொடர்ந்து நடத்த நீதிமன்றமும் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பன குறித்து ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தியது. முதல்கட்டமாக அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆறுமுக சாமி ஆணையம் கடந்த வாரம் விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இளவரசிக்கு விசாரணையில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இன்று ஆஜராகவுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்பதற்கான கேள்விகளை ஆறுமுக சாமி ஆணையம் தயார் செய்து வைத்துள்ளது. குறிப்பாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் வர காரணம் என்ன? கடைசியாக ஜெயலலிதாவை எப்போது பார்த்தீர்கள்? அவரது உடல் நிலை எவ்வாறு இருந்தது? சசிகலா மீது குற்றம்சாட்ட காரணம் என்ன என்பன உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது