தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கைலாசபட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது தான் என்று அக்கட்சியினரே பேசத்தொடங்கிவிட்டனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற இரட்டை தலைமை முற இனி வேலைக்கு ஆகாது, எடப்பாடியாரின் கொங்கு மண்டலம், ஓபிஎஸ்சின் தென் மண்டலம் என இரண்டிலும் எதிர்பார்க்காத கடுமையான தோல்வியை அதிமுக சந்தித்துள்ளதால் ”தலைமை மாற்றம் வேண்டும்” என்ற குரல் பலமாக கேட்கத்தொடங்கியுள்ளது. அதிலும் ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அரசியல் செய்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தென் மண்டலத்தில் பேசத்தொடங்கிவிட்டனர். அதை ஓபிஎஸ் ஏற்பார் என்றும் கடந்த சில நாட்களாக பேசப்பட்டது. இன்னிலையில் தான் இன்று ஒரு திடீர் திருப்பம் அதிமுகவில் நிகழ்ந்துள்ளது.

இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கைலாசபட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கட்சி நிர்வாகிகள் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தேர்தல் தோல்வி்க்கு அதிமுக இரண்டாக உடைந்து இருப்பது தான் காரணம் என தொண்டர்கள் குற்றம்சாட்டினர். அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிவித்தனர்.


எனவே உடனடியாக சசிகலாவை அதிமுகவில் சேர்த்து அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து வருகிற 5 ஆம் தேதி சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. . தற்போது தேனி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்ற மாவட்டங்களிலும் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக இரண்டாக பிளவுபட்டு தேர்தலை சந்திப்பது எதிரிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிலையை உருவாகியுள்ளதாக அதிமுக தொண்டர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் துவங்கியுள்ள இந்தக் குரல் தமிழகம் முழுவதும் அதிமுகவில் எதிரொலிக்குமா? அல்லது தேனி மாவட்டத்தோடு அடங்கிவிடுமா? எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற சசிகலா தீவிர எதிர்ப்பாளர்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள்? என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.