நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன், நான் இருக்கும் இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர் தினகரனின் சதிவேலை பலிக்காது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய   தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், “2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி கோட்டூர்புரம் பில்டர்ஸ் வீட்டில் தினகரனை பன்னீர்செல்வம் பார்த்துப் பேசியது உண்மை. எடப்பாடியை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு நாம் இருவரும் இணைந்து நல்லாட்சியைக் கொடுப்போம் என்று அவர் பேசியது உண்மை. அவரிடம் தினகரன், பிறகு பார்த்துச் செய்வோம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில்  கடந்த வாரம் தினகரனை சந்திக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் பன்னீர். ஆனால் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி சந்திக்கச் சொல்லி அவர் ஒதுங்கிக் கொண்டார். சந்திக்க நேரம் கேட்டுவிட்டு தற்போது மேடைகளில் எங்களை திட்டிவருகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம். “தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டியை நான் பார்க்கவில்லை. அதனை பார்த்துவிட்டு சென்னையில் நான் விரிவாகப் பேட்டியளிக்கிறேன்” என்று தெரிவித்தார். தினகரனை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, அது கடந்த காலம் என்று பதிலளித்தார் பன்னீர்செல்வம்.

இந்த பின்னணியில் சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் திகார் சிறையிலிருந்து வந்தபிறகு, பன்னீர்செல்வம் என்னை பார்க்க வேண்டும் என்று நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். 

என்னுடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தியதால், நான் பன்னீரை சந்தித்தேன்.  அப்போது, ‘நான் பேசியதெல்லாம் தவறு, அவசரப்பட்டுவிட்டேன். என் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிர்வாகிகளுடன் கலந்துபேசிவிட்டு இணைந்துகொள்வோம். இணைந்து எடப்பாடியை எதிர்ப்போம்’ என்று பன்னீர் என்னிடம் கூறினார்.

மேலும்,  ஓபிஎஸ் இதை மறுக்க முடியாது என கூறியதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், குழப்பமான மனநிலையில் இருக்கிறார் தினகரன். உண்மைக்கு மாறான குற்றற்றச்சட்டை சுமத்துகிறார். தினகரனுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவன், நான் இருக்கும் இயக்கத்திற்கும் வகிக்கும் பதவிக்கும் துரோகம் செய்தது கிடையாது. எப்போதும் விசுவாசமாக இருப்பவன் எனக் கூறினார்.

தொடர்ந்துப் பேசிய அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து விதமான தில்லு முல்லு செய்து மக்களை ஏமாற்றி , 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற்றார்.  திருப்பரம்குன்றத்தில் அதிமுகவிற்கு இருக்கும் எழுச்சியைக் கண்டு கலங்கிப் போயிருக்கும் தினகரன். ஆட்சியை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.