Ops election campaign

ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் மதுசூதனன்..அப்படிப்பட்ட ஒருவரை எதிர்த்து நிற்கும் யாரும் டெபாசிட்கூட வாங்க மாட்டார்கள் என ஓபிஎஸ் உற்சாகமாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாகூரான் தோட்டம் மீனவர் காலனி பகுதியில் வீதி, வீதியாக சென்று ஓபிஎஸ் வாக்கு சேகரித்தார். ஓபிஎஸ்க்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர். மொட்டை மாடிகளில் இருந்து பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பொது மக்களிடையே பேசிய ஓபிஎஸ், வேட்பாளர் மதுசூதனன் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர் என்றும் எம்.ஜி.ஆரால் தளபதி என்று பாராட்டப்பட்டவர் என்றும் தெரிவித்தார்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு மாற்று வேட்பாளராக மதுசூதனனைத் தான் ஜெயலலிதா அறிவித்தார் என்றும் அப்படிப்பட்ட ஒருவரை எதிர்த்து நிற்கும் யாரும் இந்கு டெபாசிட்கூட வாங்க மாட்டார்கள் என உற்சாகம் பொங்க கூறினார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக் கொண்டு வரும் வரை தங்களது தர்மயுத்தம் தொடரும் என்றும் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை எந்தப் பதவிக்கும் வரவிடக்கூடாது என்பதில் ஆர்.கே.நகர் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.