ops edappadi joining together in admk
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடியும் எங்களோடு இருப்பார் என்று சொல்லி வந்தனர் பன்னீர் தரப்பினர். ஆனால், இடைத்தேர்தலுக்கு முன்பே அது நடப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.
சசிகலா அணி - பன்னீர் அணி என்று இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, எடப்பாடி முதல்வரான பிறகு மூன்றாக ஆகிவிட்டது.
வரும் நான்காண்டு காலமும், எந்த பிரச்சினையும் இல்லாமல் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காகவே, பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ க்கள் சசிகலாவின் பின்னால் அணி வகுத்தனர்.

ஆனால், சசிகலா சிறைக்கு போய்விட்டார். கட்சியில் தினகரன் பிடியும் தளர்ந்து விட்டது. அதனால், பதவியை காப்பாற்றும் நோக்கில், பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள், எடப்பாடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட தயாராக இருப்பதாக கூறி விட்டனர்.
அத்துடன், அதிமுகவை உடைக்கும் திட்டத்தில் இருந்த பாஜக மேலிடம், சசிகலா குடும்பத்தினர் இல்லாத அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில் தங்கள் வியூகத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.
அதனால், தற்போது, பன்னீர்செல்வம் - எடப்பாடி தரப்பினர் இடையே, சமரச பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவே கூறப்படுகிறது. அதற்கு பாஜக மேலிடமும் பச்சை கொடி காட்டிவிட்டது.

அதனால் இன்னும் சில நாட்களில், ஒரு சுப வேளை, சுப தினத்தில் பன்னீர் அணியும் - எடப்பாடி அணியும் ஒன்றாக ஐக்கியமாக உள்ளது. இந்த இணைப்புக்கு கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
சசிகலா அல்லாத அதிமுக என்பது பன்னீர்-எடப்பாடி விருப்பம் மட்டும் அல்ல. அதுவே, பாஜக விருப்பமும் என்பதால், இந்த இரு அணிகளின் ஒருங்கிணைப்புக்கு சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.
இணைப்பு பணிகள் முடிந்த பின்னர், கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவை இந்த அணியிடம் ஒப்படைக்கப்படும். கட்சியிலும், ஆட்சியிலும் பன்னீர் முதன்மையானவராக இருப்பார். எடப்பாடி இரண்டாவது இடத்தில் இருப்பார்.

இந்த இணைப்புக்கு இரு அணிகளிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலா அணியில் தினகரன் எதிர்ப்பார். ஆனாலும், அவர் எதிர்ப்பு, புறம் தள்ளப்படும்.
பன்னீர்செல்வம் அணியில், பி.எச்.பாண்டியனும், மனோஜ் பாண்டியனும் இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
