Asianet News Tamil

முதல்வர் மு.க.ஸ்டாலினை காட்டமாக விமர்சித்த ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் ஆழ்ந்த அதிமுகவினர்.. ஏன் தெரியுமா?

தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 

OPS criticizes CM MK Stalin
Author
Tamil Nadu, First Published May 23, 2021, 3:01 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஒரு செயலைச் செய்வதற்கு முன் அதன் நோக்கம், வேண்டிய சாதனங்கள், தகுந்த காலம், செயல்முறை, தக்க இடம் ஐந்தையும் ஆராய்ந்து அறிந்த பிறகுதான் செயலைச் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இவையனைத்தும்,  முதலமைச்சர் 20-05-2021 அன்று திருப்பூரில் தொடங்கி வைக்கப்பட்ட 18 வயது முதல் 44 அவர்களால் வயதினருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தில் பின்பற்றப்பட்டதா என்றால் நிச்சயம் இல்லை.

இதற்கு முக்கிய காரணம், வேண்டிய சாதனம், அதாவது தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் இல்லை என்பதுதான். இதை நான் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகளே தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தத் தடுப்பூசியை போடுவதற்காக இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் அரசு மருத்துவமனைகளை நாடியபோது அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே. இது வெறும் ஏமாற்றத்தோடு மட்டும் நின்று விடவில்லை; கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுத்துவிட்டது. இதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால், இதற்காக பொதுமக்கள் வெளியில் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கும்; கொரோனா பரவல் குறைக்கப்பட்டிருக்கும்.

தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான் தொடர்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று முயற்சி செய்தால், 'பதிவு முடிந்துவிட்டது' அல்லது 'இருப்பு இல்லை' என்று பதில் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இந்தத் திட்டம்தான் இப்படி என்றால், 45-வயதிற்கு மேற்பட்டோருக்கான திட்டம் சரியாக நடைபெறுகிறதா என்றால் அதிலும் சில இடர்ப்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 'கோவேக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளில் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் தற்போது அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன.

அதே சமயத்தில், 'கோவேக்சின்' தடுப்பூசிக்கு பற்றாக்குறை நீடித்து வருகிறது. முதன் முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் 'கோவீஷீல்டு' தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், ஏற்கெனவே முதன் முறை 'கோவேக்சின்' தடுப்பூசியினை எடுத்துக் கொண்டவர்கள், இரண்டாவது முறையும் 'கோவேக்சின்' தடுப்பூசியைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதால், அவர்கள் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், பொதுமக்கள் தாங்களாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்தாலும், அதில் சில இடர்ப்பாடுகள் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தடுப்பூசி செலுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசின் கவனத்திற்கு எடுத்துவர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நான் இதைச் சுட்டிக்காட்டுகிறேனே தவிர, இந்த அரசை குறை கூறவேண்டும் என்பதற்காக அல்ல.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, இரண்டாவது முறையாக 'கோவேக்சின்' தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பவர்களுக்காவது 'கோவேக்சின்' தடுப்பூசி தாராளமாக கிடைக்கவும், 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி போடும் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரையும் சென்றடையவும் வழிவகை செய்ய வேண்டும்.

இது மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட கூடுதலாக தடுப்பூசிகள் பெற்றிருப்பதை மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் நேரில் சென்றோ அல்லது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பியோ அல்லது கடிதம் மூலமாகவோ சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

ஏற்கனவே தமிழகத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இடையே அறிக்கை போர் நடந்து வருகிறது. இருவரும் தனித்தனியாக அதிமுக கட்சி, கொடியுடன் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி விவகாரம் தொடர்பாக 2வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios