எடப்பாடி பழனிசாமி நீங்க ஓராண்டு முதலமைச்சரா இருந்துட்டீங்க, அடுத்த டர்ன் நான்தான் இருக்கனும், எனக்கு வழிவிடுங்க  என ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், தற்போது உச்சகட்ட நாற்காலி சண்டை நடந்து வருவதாகவும் டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழ்க்கப்படும் என தினகரன் தெரிவித்துவருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி, பழனிசாமிக்கு ஆதரவாளராக இருந்த  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு , திடீரென இன்று டி.டி.வி.தினகரனை சந்தித்து அவருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்றும், தற்போது   என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ  சிலீப்பர் செல் இல்லை  என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி  ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆவதால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவி கேட்கிறார்.  ஆனால் இபிஎஸ் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் இப்போது கடுமையான நாற்காலி சண்டை நடைபெற்ற வருவதாக தினகரன் கூறினார்.  

இது முற்றும்போது, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்து விடுவார்கள் என தினகரன் தெரிவித்தார்

தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை  என்ற  விரக்தியில் கட்சிக்குள் பாஜக செய்த சித்து விளையாட்டு தொடர்பான உண்மையை ஓபிஎஸ் உளறி வருகிறார் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது மட்டுமே சிலீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிலியை உண்டாக்கினார்.