துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 
கடந்த 2017-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு  நம்பிக்கை வாக்கு கோரியபோது ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு திமுக சென்றது.


நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திம் முடிவெடுத்து ஒரு மாதத்துக்குள் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றது திமுக. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ தீர்ப்பு வழங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சபாநாயகர் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானது. ” என மனுவில் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் வழக்கை சுட்டிகாட்டி 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைய  தடை விதிக்க வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை கடந்த மாதம் 16-ம் தேதி  தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு, 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று வாதாத்தை எடுத்து வைத்தது. இதற்கிடையே, 2017-ல் 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு எதையும் அப்போது பிறப்பிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுக்குக் கடிதம் அனுப்பினார். இந்த விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.