*    பாகிஸ்தானிடம் இருந்து மக்களை இந்த பிரதமர் பாதுகாக்கிறாராம்! மகிழ்ச்சி. ஆனால் இளைஞர்கள், விவசாயிகள், பெண்களை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார். இது எந்தவகையான தேசியவாதம்?: பிரியங்கா காந்தி. 
(கரெக்ட்டுதானுங்க அம்மணி, உங்க ஆட்சியில முக்கிய புள்ளிகள் பெண்களையும், இளைஞர்களையும் கண்டுகிட்டதெல்லாம் சாதாரண விஷயமா. தள்ளாடுற வயசிலும் திக்விஜய் சிங்கின் காதல்களும், சசி தரூரின் கில்மா கல்யாணங்களும் மறக்க கூடிய விஷயங்களா! காமன்வெல்த் போட்டிகளில் கல்மாடி அடிச்ச பணத்தை இளைஞர்கள் மறப்பாங்களா என்ன?)

*    அடுத்தவரை ஏசுவதும், அவர்களின் டஹ்னிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதையும், நாங்கள் செய்வதே இல்லை: கமல்ஹாசன். 
(ஆண்டவரே இதன் மூலமா என்ன சொல்ல வர்றீங்க?...ஒழுக்கம், பெண்கள் பாதுகாப்பு, பிள்ளைகளை கட்டுக்கோப்பாக வளர்ப்பது, ஒருவனுக்கு ஒருத்தி! இதையெல்லாம் பத்தி நீங்க பேசவே கூடாதுன்னு சில காலங்களாக விமர்சனம் வந்துட்டே இருக்குது. அதனாலதான் உன் பர்ஷனல் நான் கேட்க மாட்டேன், என் பர்ஷனல நீ  தோண்டாதேங்கிற ’ஒழுக்க’ ஒப்பந்தமா?)

*    ஹிந்துக்களை இழிவாக பேசி வந்தால், தி.க.தலைவர் வீரமணி, கடும் விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்: ஹெச்.ராஜா
(க்கும், ”முழுசா அஞ்சு வருஷம் முரட்டு மெஜாரிட்டியோட தேசத்தை ஆண்டு முடிச்சாச்சு, அடுத்தும் ஆளதுடிக்கிறாங்க. ஆனாலும் ‘கடுமையான விளைவை சந்திக்க வேண்டி வரும்’ன்னு இன்னும் வாய்ஜாலம் காட்டுறது மட்டுமே ராஜாவோட அட்மினின் வாய் கிழியும். நாத்திகத்துக்கு எதிரா சித்தாந்த ரீதியில் ஒரு வீரியத்தையும் அவங்க உருவாக்கலையே.”ன்னு கழுவிக் கழுவி ஊத்துறாங்க சார்.)

*    அ.தி.மு.க.வை வீழ்த்த ஸ்டாலினும், அவருடன் இணைந்து தினகரனும் கனவு கண்டு திட்டம் போடுகின்றனர். 47 ஆண்டு வரலாறு கொண்ட இந்த இயக்கத்தின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம். 
(அப்படியாண்ணே, அப்புறம் ஏம்ணே, ஆட்சி மற்றும் இயக்கத்துக்கு எதிரா யுத்தமெல்லாம் சத்தமா நடத்துனீங்க? முதல்வரை கவிழ்த்தி, ஆட்சியையே சாய்க்குறதுக்காக நம்பிக்கை வாக்கெடுப்பெல்லாம் கொண்டாந்து, எதிர்த்து வாக்களிச்சீங்களே, அதெல்லாம் உங்க அட்மினாண்ணே?)

*    40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன், இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: சந்திரபாபுநாயுடு. 
(நாயுடு  காரு, அப்டியே மத்தியிலேயும், யாரு வெல்லப்போறாங்கன்னு ஜோஸியத்தை உங்க அனுபவ அடிப்படையில் எடுத்து விடுங்களேன். ஏன்னா போட்டியில நீங்களும்தானே இருக்கீங்க?)