கட்சிக்குப் போஸ்டர் ஓட்டியவர், இரவு பகல் பாராது கட்சியை வளர்த்தவர்,கட்சிக்காக  உயிரையே  கொடுத்தவர், இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட மாவீரனாக வலம் வருகிறார் ஓபி எஸ்சின் மகன் ஓபி ஆர். ரிசல்ட் வருவதற்கு முன்பே எம்.பி, மோடி அறிவிக்கும் முன்பே அமைச்சர் தேனியின் அஞ்சாநெஞ்சன் என அடுக்கடுக்கான அட்ராசிட்டிகளுக்கு இப்போதே பஞ்சமில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஓபிஎஸ்சின் மகன்கள் வாய்திறந்து பேசுவார்களா ஆட்டிடுயூட் காட்டுவார்களா என்பதற்கெல்லாம் பதிலை ரவீந்திரநாத் தற்போது தனது சினிமா பாணி செய்கைகள் மூலமாக வெளிப்படுத்திவருகிறார்.இது தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களை மட்டுமின்றி அதிமுகவினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பொதுவாக மிகப்பெரிய அரசியல் தலைவரின் மேனரிசங்களைத்தான்  சினிமா படங்களில் வில்லனுக்கு வைத்து இயக்குநர்கள் அப்ளாஷ் அள்ளுவார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக ஓபிஎஸ்சின் மகன் சினிமா நடிகர்களை இமிடேட் செய்து வருகிறார். 

தேனி தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே விஜய் அஜீத் பாணியில் தலையை அசைப்பது, அதிலும்  ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மாநாட்டில் நிஜ நடிகராகவே மாறி பாட்சா ரஜினிபோல் ஒரு விரலைச் சுழற்றிக் காட்டுவதும், தலைவா விஜய் போல் தலையை வெட்டி ஆட்டுவதுமாக பார்ப்பதற்கே அந்த காட்சிகள் வித்தியாசமாக இருந்தன.ஓபி ஆரின் இந்த அதிரடிகள் மற்றும் சினிமாத்தனமான செய்கைகள் அம்மாவின் விசுவாசிகளை  காண்டாக்குகிறது என்பதே உண்மை.  

என்னதான் பெரியகுளத்தில் பிறந்தவராக இருந்தாலும், சென்னைக்குக் குடியேறிய பிறகு ஆளே ரொம்பத்தான் மாறிப்போய்விட்டார் என்கிறார்கள் ரவீந்திரநாத்தை  துவக்கத்திலேயே அறிந்தவர்கள். போட் க்ளப் ரோட்டில் அரை டிராயருடன் ஷூ போட்டுக்கொண்டு வாக்கிங் போவதாகட்டும், கிரீன் வேஸ் சாலையில் ஜிம்முக்குக் காரில் ஸ்டைலாக இறங்குவதும், ஏறுவதும், நடையும், பேசும்போதே காட்டும் ரியாக்ஷன்களும் நாளுக்கு நாள் மக்களின் விவாதப்பொருளாக மாறிவருகிறது.