மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்கும் ஆயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் பணியில் மேற்கு வங்காள முதலமைச்சர்  மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இதற்காக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மிசா பாரதி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், மத்திய முன்னாள் அமைச்சர்கள்  யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, இந்தி நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். திமுக எம்.பி.கனிமொழியையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரை சந்தித்தபின் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்  பேசும்போது, எங்களுக்குள் நல்ல நட்புறவு உண்டு. சோனியா காந்தியை சந்தித்தபோது அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். அரசியல் தொடர்பாகவும் பேசினோம் என்றார்.

வரும் 2019 பாராளுமன்ற தேர்தல் ஓரணிக்கும் எதிரணிக்குமான ஒன்றுபட்ட போட்டியாக இருக்கவேண்டும். ஒரு கட்சி எங்கு பலமாக இருக்கிறதோ அதை எதிர்த்து மிக பலமாக சண்டையிட வேண்டும். நம் அனைவரின் நோக்கமே பாஜகவை மட்டை கட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என கூறினார்.

மாநில  கட்சிகளின் முன்னணிக்கு கைகொடுக்க காங்கிரஸ் கட்சி உதவ வேண்டும். இதன்மூலமாக மட்டுமே அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை ஒழிக்க முடியும் என வும் மம்தா தெரிவித்தார்.