இன்று காலை மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் ஆதரவு தெரிவித்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணியை எவரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த நடவடிக்கை சிவசேனா மற்றும் காங்கிரசிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்று சரத் பவார் டுவிட்டரில் தெரிவித்தார்.

இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி’’என விமர்சித்துள்ளார்.  

பாஜக கூட்டணியில் பாமக இருந்து வருகிறது. தனது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு வருகிறார் ராமதாஸ். இந்நிலையில் அவர் பாஜக சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.