துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் எம்.பி ரவீந்திரநாத் குமாரின் கடிதத்தின் மேல் பகுதியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகா கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டாலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார். கட்சி ஒரு ரூட்டில் பயணித்தால் இவர் வேறு பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் இருந்து சென்ற அனைத்து எம்.பிக்களும் பதவியேற்றுக்கொண்ட போது பெரியார் வாழ்க, மார்க்ஸ் வாழ்க, அண்ணா வாழ்க, சமத்துவம் ஓங்குக, வெல்க தமிழ் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்தனர், ஆனால், ஓ.பி.ரவீந்திரநாத் பாரத் மாதாகி ஜே என்று சொல்லி பதவியேற்றுகொண்டது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுக்கு முக்கிய உதாரணம் முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியவர் அன்வர்ராஜா. ஆனால், ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்துப் பேசி கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார். பாஜக மீதான பாசத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரவீந்திரநாத்குமார் வெளிப்படுத்தி வருகிறார்.

அண்மையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எம்.பி. ரவீந்திரநாத், காவி துண்டு அணிந்து கொண்டு முதலில் நான் ஒரு இந்து என்று மதத்தை மையமாக வைத்துப் பேசியிருந்ததைக் குறிப்பிட்டு பல்வேறு தரப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்தன. அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற போது எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசுகையில் 'நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றே பேசியுள்ளார். 

இந்நிலையில், அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரின் லெட்டர் பேடில் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் படத்துடன் பிரதமர் மோடியின் படமும் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி என்ன அதிமுக தலைவரா? என நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.