வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்  குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.குடியிருப்பில் இருந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.94 அடியாக அதிகரித்து உள்ளது.

தற்போது ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கத்தில் இருந்து 7 கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்திருக்கிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் அங்கங்கே முறிந்து விழுந்துள்ளது. தற்போது திருவல்லிக்கேணியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் மரம் முறிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற 50 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மரத்தின் அடியில் சிக்கிய முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிவர் புயல் , கனமழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க உதவி எண் அறிவித்தது சென்னை காவல்துறை 94981 81239 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். வானிலை ஆய்வு மையம் கூறும் போது நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும்; புயல் கரையை கடந்த பின்னரும் 6 மணிநேரத்திற்கு அதன் தீவிரம் இருக்கும்; நிவர் புயல் தற்போது மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

  சென்னைக்கு 250கி.மீ தொலைவில், புதுச்சேரிக்கு  120 கி.மீ தொலைவில் உள்ளது நிவர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், திருப்பூர் மாவட்டங்களில் 75 கி.மீ வரை காற்று வீசும் என கூறி உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கூறுகையில்,  மக்கள் அனைவரும் இன்று இரவு வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் புயல்காரணமாக மரம் முறிந்து விழுந்து ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது’எனக் கதறி உள்ளார் என கூறினார்.