10 அல்லது 20 நாட்கள் சிறைக்குச் சென்றால் தான் கட்சி வலிமை அடையும் என காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அரசு எவ்வளவு தான் பலமாக இருந்தாலும் கட்சி பலவீனம் அடைந்தால் தோற்றுவிடும். இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது என பொறாமைப்படலாம். ஆனால் அந்த கட்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மத்தியில் நாள்தோறும் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது உகந்த விவாதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விவாதங்கள் நடை பெறுகின்றன.

விவாதங்கள் தான் கட்சியை பலப்படுத்தும். காந்தி, நேரு காலத்தில் சிறையில் நடந்த விவாதங்கள் தான் பெரிய போராட்டங்களுக்கு வித்திட்டன. போராட்டம் நடத்தி அனைவரும் சிறை சென்று 10 அல்லது 20 நாட்கள் சிறையில் இருந்தோம் என்றால் கருத்து வேறுபாடுகள் மறைந்து கட்சி வலிமையடையும். அந்த வகையில் நீங்கள் சிறைச்சாலை சென்றால் நானும் சிறைக்கு வர தயாராக உள்ளேன்.

தமிழர்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க விட மாட்டோம். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த வெற்றி கூட்டணியை அமைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மற்ற தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடவில்லை.

காங்கிரஸ் கட்சி போர்க்களத்தில் தான் தோற்றுள்ளது. போரில் தோற்கவில்லை. 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி, கருணாநிதி அமைத்தது இந்த கூட்டணி. இந்த கூட்டணி 6 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி கூட்டணியாக தொடர்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.