தமிழக சட்டப் பேரவையில் கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர். 

அதன் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் கோரிக்கை வைத்திருந்தார். 

புதிய கல்வி கொள்கையால் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும்,  மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் சுரேஷ் ராஜன் கூறினார். இதைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கை குறித்து சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

 அப்போது  தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 

தமிழ், ஆங்கில மொழிகள் தான் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படும். இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பிரதமருக்கு முதலமைச்சர்  கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை  அமலில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்தார்