திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் அல்லது பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்படும் என்று திமுக வட்டார தகவல்கள்  தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கொமதேகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சின்னமான உதயசூரியனில் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்குவதாகவே திமுக தரப்பில் கொமதேகவுக்கு சொல்லப்பட்டது. இதனால், அதிமுகவுடனும் கொமதேக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

 

ஆனால், கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ள கட்சி என்ற அடிப்படையில், கொமதேகவை அதிமுக கண்டுகொள்ளவில்லை. இதனால், யூடர்ன் அடித்து மீண்டும் திமுக கூட்டணிக்கே திரும்பியது கொமதேக.. மற்ற மண்டலங்களைப்போல அல்லாமல் கொங்கு மண்டலம் தொடர்ச்சியாக திமுகவுக்கு காலை வாரிவிடுவதால், அந்த மண்டலத்தில் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருகிறது.

 

 அந்த அடிப்படையில் கொமதேகவை அரவணைத்துக்கொண்ட திமுக, ஒரு தொகுதியை ஒதுக்க முன்வந்தது. அந்தக் கட்சிக்கு பொள்ளாச்சி அல்லது நாமக்கல் என இரு தொகுதிகளில் ஒரு தொகுதியை திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட ஈ. ஈஸ்வரன், சுமார் இரண்டே முக்கால் ஓட்டு வாங்கி, திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளினார். எனவே பொள்ளாச்சி ஒதுக்க அவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.