ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், சோதனை ரீதியில் முதலில் 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. அடுத்து இதை நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் 1-ந் தேதி நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் மத்திய அரசின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது..

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகள் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களைப் பெற முடியும்.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு என்ற நோக்கத்தை அடைவதற்காக, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரியான வடிவத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தரப்படுத்தப்பட்ட ரேஷன் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களும் பயன்படுத்தி வருகிற ரேஷன் கார்டுகளின் வடிவங்களை கருத்தில் கொண்டும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனையைப் பெற்றும் இந்த நிலையான வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன்கார்டுகளை எப்போது வழங்கினாலும், இந்த புதிய வடிவத்தை பயன்படுத்துமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த ரேஷன் கார்டுகளில், கார்டுதாரர் பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெறும், மாநிலங்கள், தங்கள் தேவைக்கேற்ப கூடுதல் விவரங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த வடிவத்திலான ரேஷன் கார்டுகள், 2 மொழிகளை கொண்டிருக்கும். ஒன்று, உள்ளூர் மொழி மற்றொரு மொழி ஆங்கிலம் அல்லது இந்தியாக இருக்கும்.


புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும். முதல் 2 எண்கள் மாநிலத்தை அடையாளப்படுத்துகிற வகையில் அமைந்திருக்கும். அடுத்த 2 எண்கள் ரேஷன் கார்டின் வரிசை எண்களாக அமையும்.

இது தவிர்த்து, ரேஷன் கார்டில் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்துவமான உறுப்பினர் அடையாளத்தை (ஐ.டி.) தரும் வகையில் இலக்கங்கள் அமையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.