தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தை விசாரிக்கப்போவதாக ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்று அவர் பேசிய கருத்து இன்று விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதனால் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்  எனவே ஆலையை இழுத்து மூட வேண்டும் என தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டுவந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் திரண்டு பேரணி சென்றதால் அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் கலவரமாக வெடித்தது அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, எதிர்கட்சிகள் அரசை மிககடுமையாக விமர்சித்தன, 

இந்த நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு  ஒரு நபர் விசாரணை கமிஸன் அமைத்து உத்தரவிட்டது. இந்த கமிஸன் இதுவரை 14 கட்ட விசாரணையை முடித்துவிட்டது. இதுவரை 379 பேரிடம் நடத்திய விசாரணையில், 555 ஆவணங்களை ஆணையம் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, சமூக அமைப்புகள் மற்றும் ரிட் மனு தாக்கல் செய்த நபர்களிடம் ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் சொல்ல தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், திரும்பிவரும்போது  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியதற்கு கூட்டத்தில் திடீரென சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் என்றார். சமூக விரோதிகள் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினர் என்றும் அவர் கூறினர், சமூகவிரோதிகள் ஊடுருவியது உங்களுக்கு எப்படி தெரியும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. தமக்கு எல்லாம் தெரியும் என்று ஆவேசமாக பதில் அளித்தார். எனவே இந்த விசாரணைக்கு தேவைப்பட்டால் சமூக விரோத ஊருடுவல் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று  ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.