அப்படி ஒன்றாக தங்கக் கூடிய சூழ்நிலையில் நோய்த்தொற்று பரவல் வராதா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்கள் ஆலயங்கள் மூடப்பட்டால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வரமாட்டார்கள் என்கின்ற உள்நோக்கம் இருப்பதாக பக்தர்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஒமிக்ரான் எதிரொலியாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது ஆனால் தைப்பூசம் வரை ஆலயங்கள் திறந்து வைக்க அரசு முடிவெடுக்க வேண்டும் என இந்து தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. மும்பை, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இது தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ஒமைக்ரானுடன் கொரோனாவும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.தமிழகத்தில் ஏற்கனவே திரையரங்குகள் வணிக வளாகங்களுக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களில் மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து தமிழர் கட்சி, தைப்பூசம் வரை ஆலயங்கள் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைவர் ராமரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

கொரோனா,ஓமிக்ரான் நோய்த்தொற்று பரவலை காரணமாக வைத்து வெள்ளி சனி ஞாயிறு மூன்று தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. தைப்பூசம் திருவிழா கொண்டாட பக்தர்கள் அனைவரும் பாதயாத்திரையாக நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு ஆறுபடைவீடுகள் மட்டுமல்லாது அனைத்து தலங்களுக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்படி வரக்கூடிய சூழ்நிலையில் பக்தர்கள் வெள்ளி சனி ஞாயிறு மூன்று தினங்களில் திருக்கோயில் மூடப்பட்டால் எங்கே தங்குவார்கள்? அவர்களுக்கான உணவு வசதி ஏற்படுத்திக் கொடுப்பார்கள்? என்கின்ற நடைமுறை சிக்கல் இருக்கிறது.அப்படி ஒன்றாக தங்கக் கூடிய சூழ்நிலையில் நோய்த்தொற்று பரவல் வராதா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்.பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்கள் ஆலயங்கள் மூடப்பட்டால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வரமாட்டார்கள் என்கின்ற உள்நோக்கம் இருப்பதாக பக்தர்கள் சந்தேகிக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அவர்கள் வழிபாட்டுத் தலங்கள் வெள்ளி,சனி, ஞாயிறு மூடுவது குறித்த உத்தரவை தைப்பூசம் நிறைவுற்ற பிறகு பிறப்பிக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.