அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸின் தம்பி ஓ.ராஜா நான்கே நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பாகி உள்ளது. 

அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதுணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ஓ.பிஎஸும் - எடப்படியும் கூட்டாக ஒர் அறிக்கையை கடந்த 19ம் தேதி அறிவித்து இருந்தனர். 

மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றியதலைவராக பொறுப்பேற்ற அன்றே, ஓ.ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ‘‘கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கு முரணான வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுபாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஓ.ராஜா கழகத்தின்அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகி வந்தன. ஆனால், அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து அதிமுக தரப்பில் இருந்து வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அவர் டி.டி.வி.தினகரன் அணியில் இணைய உள்ளதாகவும் வதந்திகள் பரவின. இந்த நிலையில் இன்று, அதிமுகவில் இருந்து வந்த ஒரு அறிக்கையில், ஓ.ராஜா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரியதால் அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நான்கே நாட்களில் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.