Asianet News TamilAsianet News Tamil

TN Govt : ஜோராக விற்கும் கஞ்சா.. திமுக அரசு என்ன செய்தது ? வெளுத்து வாங்கிய சீமான் !

Seeman : தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Ntk co ordinator seeman statement about DMK government should take serious action to prevent Tamil Nadu from becoming a cannabis market
Author
First Published Jun 6, 2022, 10:56 AM IST

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, மதுபானங்களை அரசே விற்பதன் மூலம் தமிழகக் குடும்பங்களைச் சீரழித்தது போதாதென்று, தற்போது கஞ்சா பயன்பாட்டினை கட்டுப்படுத்த தவறி, வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே அழித்தொழிக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் ஒவ்வொருநாளும் கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதும், அதனால் அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்பதும் மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டால் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்ற நிகழ்வுகளும் பெருமளவு அதிகரித்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாகச் சீரழியவும் காரணமாகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு இலட்சம் கிலோ அளவிற்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ளது.

Ntk co ordinator seeman statement about DMK government should take serious action to prevent Tamil Nadu from becoming a cannabis market

போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்த காவல்துறையினர் கைதாகியுள்ளதும், கஞ்சா விற்பனை தொடர்பாகப் பொதுமக்கள் அளிக்கும் ரகசியத் தகவல்களைக் கசியவிடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுப்பதும், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு எந்த அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதையே காட்டுகிறது.

கடந்த காலங்களில் பெருநகரங்களில் மிகமிக ரகசியமாக மட்டுமே கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு என்றிருந்த நிலைமாறி, தற்போது தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களில்கூட மிக சாதாரணமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது தமிழிளந்தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆந்திராவிருந்தே நாள்தோறும் தமிழ்நாட்டிற்குள் கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக கடத்தப்படும் நிலையில், அதனைத் தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது மட்டுமே அவ்வப்போது கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இடைத்தரகர்கள் மீது எடுக்கப்படுமளவுக்கு, கஞ்சா உற்பத்தி முதலாளிகள் மீது தமிழகக் காவல்துறையால் எவ்வித உறுதியான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால்தான் தமிழ்நாட்டில் இன்றுவரை கஞ்சா பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. மேலும், போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கும் ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவலர்கள் பிரிவில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையும் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முழுவதுமாகத் தடுக்க முடியாததற்கு மற்றுமொரு முக்கியக் காரணமாகும்.

ஆகவே, காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா. மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரழிந்து வரும் தமிழக இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனையில் உடனடியாகச் சீரிய கவனமெடுத்து தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுவதுமாக ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சிறப்பு ஆலோசனை வகுப்புகளை’ உடனடியாக நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !

இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !

Follow Us:
Download App:
  • android
  • ios