மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சி அமைக்கும் பாஜக ஆந்திராவில் 18 தொகுதிகளில் நோட்டாவுக்குக் கீழே வாக்குகளைப் பெற்று அதிர்ச்சி அளித்திருக்கிறது. இதேபோல காங்கிரஸ் கட்சியும்  நோட்டாவுக்குக் கீழே வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 தொகுதிகளிலும் தெலுங்குதேசம் கட்சி 24 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் தெலுங்குதேசம் கட்சி 3  தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆந்திராவில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என 4 முனை போட்டி இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் இரு முனை போட்டி இருந்ததை மட்டுமே உறுதி செய்திருக்கிறது. தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜகவையும் காங்கிரஸையும் மக்கள் துளிகூட கண்டுகொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த இரு கட்சிகளும் நோட்டாவைவிட மிகக் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள்ளன.
மத்தியில் 303 இடங்களை தனித்து பிடித்த பாஜக அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்கிறது. ஆனால், அந்தக் கட்சி ஆந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 18-ல் நோட்டாவைவிட குறைவாக வாக்குகளைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில்  1.5 சதவீத ஓட்டு நோட்டாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், பாஜகவோ  0.96 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சியும் நோட்டாவுக்குக் கீழே வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி 1.29 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதேபோல ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு 1.28 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், பாஜக 0.84 சதவீத ஓட்டுகளையும் காங்கிரஸ் கட்சி 1.17 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.