பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் தன்னுடைய இரு மகள்களையும் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு முதல் படிக்க வைத்து வருகிறார். 

பின்னர் இருவரும் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா கல்வி நிறுவனத்தின் கிளைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது ஜனார்த்தனன் தனது மகளைப் பார்க்கச் சென்றால் ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தனன் மனுத்தாக்கல் செய்தார். 

அதில் தனது மகள்கள் இருவரையும் நித்யானந்தா ஆசிரம அதிகாரிகள் கடத்திவைத்துள்ளார்கள். அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிமன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரமத்தைச் சேர்ந்த பிராணபிரியா, பிரியத்வா ஆகிய 2 பெண் மேலாளர்களை அகமதாபாத் போலீஸார் நேற்று கைது செய்து ஆசிரமம் முழுவதும் போலீஸார் சோதனையும் நடத்தி 2 சிறுமிகளையும் மீட்டுள்ளனர்.


இதுகுறித்து அகமதாபாத் நகர போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி.அசாரி கூறும்போது, “பெண் மேலாளர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 2 பெண்களையும் மீட்டு அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளோம். 

நித்யானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். 


நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார். தேவைப்பட்டால் முறைப்படி எவ்வாறு அவரை வெளிநாட்டில் கைது செய்து அழைத்து வர முடியுமோ அவ்வாறு அழைத்து வருவோம். நி்த்யானந்தா மீது கடத்தல் வழக்கு, முறைகேடான வழியில் பணம் பெற்று ஆசிரமம் நடத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவி்த்தார்