தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன  சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி எப்போதும் அரசியலுக்க வரமாட்டேன் என்பதையே அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினிகாந்த் சொன்ன படி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ரஜினிகாந்த் அரசியல் வருகைக்காக நாள் நெருங்கிவிட்டதாக  அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில், திடீரென அவருக்கு  உடல் நல குறைவு ஏற்பட்டு தற்போது அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு முழு ஓய்வு தேவை எனவும், மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ரஜினியை அவரது இல்லத்தில் தமிழருவிமணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ள பூத் கமிட்டி பணிகள் தொடர்பாகவும் மேலும் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ஆம் தேதி கட்சியின் அறிவிப்பை வெளியிடுவது குறித்தும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. 

இதில் திடீரென அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த குறைந்த காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு, மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பல துன்பங்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன் நான் அரசியலுக்கு வந்தே தீருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நான்கு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள்  என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. என தனது அறிக்கையில் ரஜினி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் தலைவணங்குகிறேன், என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என தனது ரசிகர்களுக்கு அவர் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். முதலில் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள் அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று  கூறிய தமிழருவி மணியன் மற்றும் பாஜகவிலிருந்து எனக்காக தான் வகித்த பதவியை கூட உதறிவிட்டு வந்த அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அதேநேரத்தில், தேர்தல் அரசியல் வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதாவது இப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை ரஜினிகாந்த் இதன் வாயிலாக கூறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்கள் ரஜினியின் இந்த முடிவால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.