ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது..! கண்டித்த தலைமை நீதிபதி..! தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தர்மசங்கடம்..!
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தங்களுக்கு மேலும் 7 மாதங்கள அவகாசம் வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்டு தலைமை நீதிபதி ரமணா அமர்வு, அதிருப்திக்கு ஆளானது. ஏற்கனவே பல முறை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் அவகாசம் கோருவது ஏன் என கண்டிப்புடன் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கடந்த அதிமுக அரசை போலவே திமுக அரசும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தயக்கம் காட்டுவதால் உச்சநீதிமன்றத்திடம் தமிழக தேர்தல் ஆணையம் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
அடுத்த மாதம் தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அது முடிந்த உடன் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். டிசம்பருக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறி வருகிறார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தங்களுக்கு மேலும் 7 மாதங்கள அவகாசம் வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்டு தலைமை நீதிபதி ரமணா அமர்வு, அதிருப்திக்கு ஆளானது. ஏற்கனவே பல முறை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் அவகாசம் கோருவது ஏன் என கண்டிப்புடன் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்துடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தும் போது உள்ளாட்சித் தேர்தலை மட்டும் அப்படி நடத்த முடியாமல் போவது ஏன்? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த போதுமான அளவிற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டதாகவும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே மேலும் ஒரு நாள் கூட கூடுதல் அவகாசம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் கடுமை காட்டியது. அத்துடன், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது எத்தனை நாட்கள் தேவை என்பதை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து தங்களுக்கு குறைந்தது நான்கு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. மேலும் வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொங்கலுக்கு முன்னதாக அல்லது பொங்கல் முடிந்து தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.