காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது, குறிப்பாக முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் காஷ்மீர் மன்னருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பாஜக மீறிவிட்டதாகவும், காஷ்மீர் மக்களின் விருப்பத்தை கேட்காமல் எதேச்சதிகாரமாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நடந்துகொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அரசு சிறைபிடித்து வைத்துக்கொண்டு சர்வாதிகாரம் செய்யவதாகவும், காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறித்து உள்நாட்டிலேயே அவர்களை அடிமைகளைப்போல் மத்திய அரசு நடத்துவதாகவும்  ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். 

காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசர நிலை தொடர்கிறது, மக்கள் அங்கு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்றும், காஷ்மீர் ஒரு சர்வாதிகார தீவாக மாறியள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அவருக்கு பதிலலித்த காஷ்மீர் மாநிலத்தின் ஆளுனர் சத்யபால் மாலிக், காஷ்மீர் மிக அமைதியாக உள்ளது இங்கு மக்கள் மிக இயல்பாக வாழ்ந்து வருகின்றனர், நிலைமை இப்படி இருக்க  ராகுல்காந்தி  தேவையில்லாமல் காஷ்மீரைப்பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும். ராகுல் விரும்பினால் நேரில் வந்து பாரக்க நானே ஏற்பாடுசெய்கிறேன், அவர் தாராளமாக காஷ்மீருக்கு வரட்டும் என்று அவர் தெரவித்திருந்தார். நிச்சயம் வருகிறேன் என்று பதில் தெரிவித்திருந்த ராகுல் காந்தி,  இன்று   அனைத்துக் கட்சித் தலைவர்களுடன்  அதாவது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்குச் சென்றனர்.

 ஆனால் அங்கு சென்றவர்களை காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்த பாதுகாப்பு படையினர் வழிமறித்ததுடன், காஷ்மீருக்கு தற்போதைக்கு உங்களால் செல்ல முடியாது அதற்கு உங்களுக்கு  அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டனர்.  இதனால் சென்றவர்களை அனைவரும் விமான நிலையத்திலேயே சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பினர்.  அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள  எதிர்கட்சித்தலைவர்கள் , நாங்கள் சந்தேகிப்பது போல  இன்னும் நிலைமை சீரடைய வில்லை , காஷ்மீரில்  பதற்றமான நிலையே நீடிக்கிறது இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை,  இதனால் தான் எங்களை உள்ளோ அனுமத்திக்க மறுக்கிறார்கள், என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.