சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தையைக் காரணம் காட்டி சசிகலாவை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு வலு சேர்க்கும் பொருட்டு ஜனவரி முதல் வாரத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என பெங்களூரு  புகழேந்தி தெரிவித்தார். அதுமட்டுமின்றி சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் இணைவார் என்றும் ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கேயே சசிகலாவும் இணைவார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என சிறையில் நடந்த விழாவுக்கு வந்திருந்த கர்நாடக சிறைத் துறை இயக்குநர் என்.எஸ். மெகரிக்  தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் உருவான நாளான நவம்பர் 1ஆம் தேதியன்று சிறை நன்னடத்தை விதிகளின் படி அம்மாநில சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 141 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.  ஆனால் அதில் சசிகலாவின் பெயர் இல்லை என்பதால் அமமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.