நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணிக்கு வருமாறு எந்த கட்சியையும் தாங்கள் இதுவரை அழைக்கவில்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கு பிறகு யாருடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்து கட்சிகளுக்கு அழைப்பு விடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு தேசிய தலைவர் அமித் ஷா வந்து சென்றது பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய உற்சாகத்தை தந்துள்ளது. தமிழகத்திற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சி பல நல்ல திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படாத எத்தனையோ திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க.னதா கட்சி முடிவெடுக்கும். வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தினகரன் போன்றவர்கள் கூறுகிறார்கள். இந்த கூட்டணியில் யார், யார் இருக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. கட்சி தான் முடிவு செய்யும் என தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.