no one can touch Constitution law if we rule thirumavalavan...
கடலூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மண்ணை ஆளும் நிலை வந்தால், யாராலும் அரசியல் சாசன சட்டத்தில் கை வைக்க முடியாது என்று தொல்.திருமாவளவன் அடித்து கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் விழா கருத்தரங்கு கடலூரில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன் முன்னிலை வகித்தார்.
இதில், தொல்.திருமாவளவன் பேசியது: "கம்யூனிஸ்டுகள் காரல் மார்க்சின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும், தலித் இயக்கங்கள் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும், திராவிட இயக்கங்கள் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.
காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கு மட்டும் உரியவர் அல்ல, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் உரியவர். இன்றைக்கும் முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாக காரல் மார்க்ஸ் இருக்கிறார்.
இந்தியாவில் முதலாளித்துவம் சாதியின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதியின் பெயரால்தான் உற்பத்தியும், தொழிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் முதலாளி, தொழிலாளி என்ற கட்டமைப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆண்டான், அடிமை என்ற உறவுமுறையைத்தவிர வேறு எந்த முறையும் கிடையாது.
இங்கே, தலித்துகள் விவசாய கூலி தொழிலாளிகளாகவும், உதிரி தொழிலாளிகளாகவும் இருக்கிறார்கள். எனவே, அம்பேத்காரியக்கமே இந்த மண்ணின் மார்க்சியம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மண்ணை ஆளும் நிலை வந்தால், யாராவது அரசியல் சாசன சட்டத்தில் கை வைக்க முடியுமா? முடியாது.
டெல்லியில் சீத்தாராம் யெச்சூரியை நான் சந்தித்தபோது, தி.மு.க.வுக்கு ‘செக்’ வைப்பதற்காக திருமாவளவளன் யெச்சூரியை சந்தித்ததாக சொன்னார்கள்.
அரசியல் கணக்கு நமக்கு தேவையில்லை. சாதி ஒழிப்புக்காகவே இடதுசாரிகளோடு சேர்ந்து போராடுகிறோம். இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகளோடு நிற்கிறார்களோ இல்லையோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரிகளோடு நிற்கும்" என்று அவர் பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வக்கீல் திருமார்பன், மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர்கள் அறவாழி, கதிர்வாணன், தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி,
பண்ருட்டி தொகுதி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை செயலாளர் புரட்சியாளன், ஒன்றிய துணைச்செயலாளர் எழில் வளவன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ஆதிகுடியரசு, இளம்பிறை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் குளோப் மற்றும் பலர் பங்கேற்றனர்.
