இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இ ந் நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர்  நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “ இந்தியா மீண்டும் கொரேனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வலியைப் புரிந்துகொள்ள முடிகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பிலிருந்தும் நாம் மீண்டு வருவோம். எந்த நேரத்திலும் நாம் பொறுமையையும் நம்பிக்கையையும் நாம் இழந்து விடக்கூடாது. கொரோனா பரவலை தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசித்துள்ளேன். மருத்துவ நிபுணர்களின் தொடர்ந்து கடுமையான உழைப்பால் கடந்தாண்டு இறுதியில் நமக்கு தடுப்பூசி கிடைத்தது. மருத்துவ நிபுணர்களின் அசாதரண உழைப்பால்தான் 2 தடுப்பூசி மருந்துகள் இந்தியாவால் தயாரிக்க முடிந்தது.
இந்தியாவில் குறைந்த காலத்தில் விலை குறைந்த தடுப்பூசியை தயாரித்திருக்கிறோம். ஏழை மக்கள் எல்லோருக்குமே இலவச தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல கொரோனா நோயாளிகள் எல்லோருக்குமே ஆக்சிஜன் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலை அதிக சீற்றத்துடன் உள்ளது. அதேவேளையில் நாட்டில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அவசியமில்லை. பொதுமக்கள் அத்தியாவாசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். புலம்பெயர் தொழிலார்களின் வாழ்வாதாரத்துக்கு மாநில அரசு உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.