நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளுக்குச் நேரில் சென்று பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

ஸ்டாலினின் இந்த செல்பாடுகள் குறித்துப் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் சுய விளம்பரத்துக்காக இது போன்ற செல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அவர் பாட்டுக்கு இங்கு வருவார், எதையாவது பேசிவிட்டு போய்விடுவார்… ஆனால் கடைசி வரை இருந்து நிவாரணப் பணிகளை செய்யப் போவது என்னவோ நாங்கள் தான்… ஸ்டாலின் சுய விளம்பரத்துக்காத்தான் இப்படி செய்கிறார் என விமர்சித்தார்.

இந்த நிலையில், நீலகிரியில் இருந்து சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதில் அளித்த ஸ்டாலின் எனக்கு விளம்பரம் தேடவேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளாக துணை முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். இப்போது திமுக தலைவராக உள்ளேன். எனக்கு விளம்பரம் அவசியம் இல்லை. 

நீலகிரி மாவட்டத்தில் நான்கைந்து நாள்களாக கனமழை பெய்து, கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியே காணாமல் போய் இருக்கிறது. இன்றைக்கு ஒரு பேரழிவு - பேராபத்து ஏற்பட்டிருக்கின்றது. இதுவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்று பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.