காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் கேரளாவுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தபின், அந்தத் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது.

இதனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழக்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடயே நாளை  சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிலர் போட்டி நடத்தும் இடத்துக்கு சென்று காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாக  தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம், அல்லது கொச்சி நகருக்கு மாற்றப்படலாம் என்று செய்திகள் வந்துள்ளன.

வரும் 10-ம் தேதி சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியைத் தவிர்த்து வரும் 20-ம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கெனவே கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை இருக்கும் நிலையில், பெங்களூரு அணி சென்னையில் விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தலாம். இதனால், இந்தப் போட்டி மற்றும் அடுத்து வர இருக்கும் சில போட்டிகளை கொச்சின் அல்லது திருவனந்தபுரத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இது குறித்து பேசிய கேரள கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஜேயேஷ் ஜார்ஜ் , சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறினார்.

திருவனந்தபுரம், கொச்சி நகரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பமாக இருப்பதாக நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஜார்ஜ் தெரிவித்தார்.