டெங்கு தமிழகத்தை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமானது ,இந்நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதே.டெங்குவைத் தடுக்க இன்னும் சரியான தடுப்பூசிகள் வரவில்லை. என புகார் வைக்கின்றனர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம். 

டெங்குவுக்கு சில தடுப்பூசிகள் இருந்தாலும் ,சில பிரச்சினைகளால் அது முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களை பல்கிப் பெருகாமால் தடுப்பதே, டெங்குவைகத் தடுக்க மிகச் சிறந்த வழி. இக்கொசுக்கள் நன்னீரிலேயே இனப்பெருக்கம் செய்வதால், இதை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் மிக முக்கியம். இக் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கொசு ஒழிப்புப் பணியில் போதிய ஊழியர்களை ஈடுபடுத்துவதும் அவசியம். ஆனால் ,அரசு இந்த இரண்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டது. 

முறையான பயிற்சி பெற்ற ஊழியர்களை போதிய அளவில் அரசு நியமிக்க வில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததும், கொசு ஒழிப்புப் பணியை பாதித்துள்ளது.மேலும், இவ்வாண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காததால், மக்கள் திறந்த பாத்திரங்களில் தண்ணீரை நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கின்றனர்.இவையே, டெங்கு அதிக அளவில் பரவக் காரணம். இந்தத் தோல்வியை மறைக்கவே ,தமிழக அரசு ,நில வேம்பு கசாயம் விநியோகம் போன்ற பல்வேறு திசை திருப்பும் விசயங்களை செய்கிறது. இதுவருத்தம் அளிக்கிறது. 

எனவே,டெங்குவின் எண்ணிக்கை வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை மிரட்டும் போக்கை அரசு கைவிட்டு , டெங்குவை கட்டுப்படுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என அச்சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் ,தெரிவித்துள்ளது.