no family politics Where did he come from without family Divakaran smashed dinakaran
சிவகங்கை
டி.டி.வி.தினகரம் குடும்ப அரசியல் கூடாது என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்? என்று “அம்மா அணி” என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கிய சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா அணி என்ற பெயரில் ஒரு அணியும் தனித்தனியாக இயங்கின.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அவருடைய தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியினர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சி தலைவி அம்மா அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இரு அணியினரும் ஒன்று சேர்ந்தனர். தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு தனி கட்சியை உருவாக்கினார். இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் சசிகலாவின் தம்பி திவாகரன்.
ஆனால், தற்போது திவாகரனுகும், தினகரனுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் திவாகரன் “அம்மா அணி” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளார்.
இதன் தொடக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு திவாகரன் மலர் தூவி மரியாதை செலுத்தி விளக்கேற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "அம்மா அணி இன்று முதல் உயிர்ப்பிக்கப்படுகிறது. இளைஞர்களை அதிகம் சேர்த்து அறிவியல் பூர்வமாக சிந்தித்து உயர்ந்தபட்ச அமைப்பாக இது செயல்படும்.
சென்னையிலும் தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கையின்படி சசிகலா வழிகாட்டுதலுடன் இக்கட்சி செயல்படும்.
“அம்மா அணி” அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுவேன். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழு பங்கு உண்டு.
ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆனதற்கு பிறகு நான் பரிந்துரைத்த நண்பர்களும், ஆதரவாளர்களுமே கட்சி நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். அவர்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய், புரட்டுகளாகவும், மாயையை ஏற்படுத்துவது போன்றும் உள்ளன.
சட்டசபை கோவிலை போன்றது. அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். ஆனால், தினகரன் அதை ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்?
சசிகலாவின் அக்காள் மகன் என்பதாலேயே அவருக்கு எம்.பி. பதவி கிடைத்தது. பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை பிடித்து துணை பொதுச்செயலாளர் பதவியை வாங்கி கொண்டார்.
சமீபத்தில் வெற்றிவேல் வெளியிட்ட அறிக்கையில், அதிகமான தொண்டர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அவர்களை அரவணைப்பதற்காகவே இந்த கட்சியை தொடங்கி உள்ளேன்.
தினகரன் கட்சியில் மாநில பொறுப்பாளர்களாக உள்ள அனைவரும் தினகரனுக்கு நெருங்கிய உறவினர்கள். தினகரன் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
வருகிற உள்ளாட்சி தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தொண்டர்களின் மனநிலை அறிந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்" என்று அவர் கூறினார்.
