தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செல்கிறேன். தமிழகத்தில் ராகுல் காந்தியும் மு.க. ஸ்டாலினும் விரைவில் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டுமா, டெல்லி ஆள வேண்டுமா என்பதே இந்தத் தேர்தலின்  மையப்பொருள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிடுகிறது என்று எண்ண வேண்டாம். 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது. இந்த அதிமுக அரசால் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. அது நீட் தேர்வாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடர்களின் போதும் சரி மத்திய அரசிடமிருந்து எந்தச் சிறப்பு உதவியும் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. 
இந்தி ஆதிக்க பிரச்னையும் இருக்கிறது. ஒரே மொழி; ஒரே கலாசாரம் என்பதில் பாஜக அரசு தெளிவாக உள்ளது. இதை ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகதான் தட்டி கேட்க வேண்டும். ஆனால், கேட்கிற துணிவு அவர்களிடம் கொஞ்சமும் இல்லை. காரணம், அதிமுகவினர் மீது பல்வேறு விசாரணைகள் உள்ளன. இந்த விசாரணைகளுக்கு அஞ்சியே அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதே கிடையாது” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.