குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கடந்த 3 நாட்களாக கொல்கத்தாவில் மம்தா பேரணி நடத்தி வரும் நிலையில் அதே பாணியில் சென்னையில் பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் பிரபல வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை கொல்கத்தாவிற்கு அழைத்துப் பேசினார் மம்தா பானர்ஜி. அன்று முதல் அவரது ஆலோசனையின் படியே அரசியல் செய்து வருகிறார் மம்தா. இதற்கு காரணம் ஆந்திராவில் மிருக பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டியை பிரசாந்த் கிஷோர் ஆட்சியில் அமர்த்தியது தான். அதோடு மத்திய அரசுக்கு எதிரான போராட்ட வடிவத்தை முழுமையாக மம்தா மாற்றினார். காரணம் பிரசாந்த் கிஷோர்.

முன்பெல்லாம் பொதுக்கூட்டத்தில் பேசுவது என்பதோடு மம்தாவின் போராட்டம் முடிந்துவிடும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்திய அரசுக்கு எதிராக அடிக்கடி பேரணி நடத்துகிறார் மம்தா. இது பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் படி எடுக்கப்பட்ட முடிவு என்கிறார்கள். இதே போல் ஆந்திராவிலும் கூட தேர்தல் பிரச்சார வடிவத்தை பேரணி வடிவிலேயே ஜெகன் மோகனுக்கு வகுத்துக் கொடுத்திருந்தார் பிரசாந்த் கிஷோர்.

நடந்தே செல்வது அல்லது வாகனங்களில் பேரணியாக செல்வது என்று மக்களை நேரடியாக சந்தித்தார் ஜெகன். தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அந்த வகையில் திமுகவும் தற்போது பேரணி என்கிற போராட்ட வடிவிற்கு வந்துள்ளது. இதற்கு முன்பெல்லாம் சாலை மறியல், ஆர்பாட்டம், அதிகபட்சமாக சிறை நிரப்பும் போராட்டம் தான் திமுகவின் எதிர்ப்பை காட்டும் அம்சமாக இருந்தது. இந்த நிலையில் 11 கட்சிகளுடன் இணைந்து பேரணி நடத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இந்த பேரணி திட்டம் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோரின் யோசனையாக இருக்கலாம் என்கிறார்கள். அதே சமயம் தமிழகத்தை பொருத்தவரை எந்த அரசியல் கட்சிக்கும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதிலும் திமுக போன்ற பிரதான கட்சிகளுக்கு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் பேரணிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதையும் போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.