தமிழகத்தில் வேலூ தொகுதியில்லாமல் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவின் போது இயந்திரங்கள் செயல்படாமல் போனதால் தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதும், பேட்டரி குறைபாடு காரணமாக அதை சரிசெய்ய கால தாமதம் ஆனது.

அரியலூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “எந்தப் பொத்தானை அமுக்கினாலும் இலை சின்னத்துக்கு வாக்குப் பதிவாகிறது என்ற புகார் எழுந்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும் கூட, இது வதந்தியாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை மிகவும் கவனமாகக் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கடலூர் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் பாவடைப்பிள்ளை அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப் பதிவு நடைபெற்றது. 356 வாக்குகள் பதிவான நிலையில், வாக்காளர் ஒருவர் அமமுக வாக்களிக்கக் கூடிய பொத்தானைக் காணவில்லை எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து அங்கிருந்த அமமுக வேட்பாளரின் முகவர், தேர்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் திருவதிகை வாக்குச்சாவடியில் துவக்கத்திலிருந்து வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என அமமுகவினர் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வாக்களிக்க பொத்தானே இல்லை என்பதால் கடலூர் தொகுதி வேட்பாளர் காசி தங்கவேல் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். ஆனால் காசி தங்கவேலின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மாற்று இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு 3 மணியில் இருந்து துணைராணுவத்தின் உதவியுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.