no ambition of becoming prime minister said chandrababu naidu

பிரதமர் பதவி மீது தனக்கு விருப்பம் இல்லை என ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டிற்கு அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு வந்தபோது, வருங்கால பிரதமரே என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து அந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை. 1996ல் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் மாநில நலனுக்காக மறுத்துவிட்டேன். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவெ கௌடா பிரதமராவதற்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், தற்போது சிலர் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அதை தான் 22 வருடங்களுக்கு முன்னரே செய்துவிட்டேன். அதே போலவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்று சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய பாஜக அரசு மறுத்ததால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பிறகு மத்திய அரசையும் பாஜகவையும் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடிவருவது குறிப்பிடத்தக்கது.