நடிகர் கமல்ஹாசனுடன் தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியிலும் கமல்ஹாசன் ஈட்டுபட்டிருக்கிறார். இன்று டெல்லி சென்ற கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரப்பரப்பை கிளப்பியது.
நடிகர் கமலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கமலுடன் தேர்தல் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். 
பாலகிருஷ்ணன் மேலும் கூறும்போது, “மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன் ஏற்கனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தமிழக தேர்தல் நிலவரங்கள் குறித்து பிரகாஷ் காரத்துடன் கமல் பேசியுள்ளார். அதற்கு பிரகாஷ்காரத், இந்தியாவில் பா.ஜ.க.வை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்துவருகிறோம்.


தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது தேர்தலை எதிர்கொள்வது என ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழ் மாநிலக் குழுவுக்கு வழங்கிவிட்டோம். தற்போது தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே, தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று பிரகாஷ் காரத் கூறியிருக்கிறார்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது