கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆந்திர பிரதேச முதலமைச்சரானார் சந்திர பாபு நாயுடு. ஆனால் அந்மமாநிலத்தின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற காரணத்தால்  கூட்டணியில் இருந்து விலகியதோடு பாஜகவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். காங்கிரசுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில்  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்க உள்ளார். இதற்காக அவர் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் , அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 2014 ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  

நானும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய நான் நினைக்கிறேன். இதற்காக எனது கோரிக்கையை பொதுக் கூட்டத்தின் போது வெளிப்படையாக கூறினேன். ஆனால் நாடு முழுவதிலும் உள்ள விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை   மோடி வெளியிடவில்லை. கடன் தள்ளுபடிக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க மறுக்கிறது என குற்றம் சாட்டினார்.

மாநில அரசிடம் நிதி இல்லை. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய உறுதியாக உள்ளோம் என பாபு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து  அனந்தபூரில் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எந்த முகத்துடன் பிரதமர் மோடி ஆந்திரா வருகிறார் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை பார்க்க வருகிறாரா?

இல்லை, எங்களின் பிரச்னைகளை பார்த்து சிரிக்க வருகிறாரா?  என கேள்வி எழுப்பினார். மோடி ஆந்திரா வருவதை அனைத்து மக்களும் எதிர்க்கிறார்கள். ஆந்திரா மறுசீரமைப்பு சட்டத்தை அவர் அமல்படுத்தினால் அவர் இங்கு வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.