புதுக்கோட்டை, நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை பேருந்து சேவையை நாளை 1 மணிமுதல் நிறுத்தி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கக் கூடும். புயல் கரையை கடக்கும் போது சடார் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


* 24, 25ம் தேதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

*  நிவர் புயலை முன்னிட்டு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நாளை முதல் 1 மணிவரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

*  நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

* ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாக்க வேண்டும். 

*  நிவாரண முகாம்களில் போதுமான அளவு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இருப்பு வைக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

* பேட்டரி மூலம் இயங்கும் வானொலி மூலம் வானிலை நிலவரங்களை மக்கள் கேட்டு செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். 

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.

*  வட தமிழக கடற்கரையோரம் புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் கடலுரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்.

* அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

* மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.