பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்காரி நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலை பயமின்றி விரிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தொழில் முனைவோர்கள் அரசு அதிகாரிகளால் துன்புறுத்துவது பற்றியும் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், ஏன் இந்த அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் வந்து லஞ்சம் பெறுகின்றனர். நான் அவர்களின் முகத்தை பார்த்து சொல்கிறேன். நீங்கள் அரசாங்க ஊழியர்கள், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நான் மக்களுக்கு பதில் செல்ல வேண்டும். நீங்கள் திருட்டுத்தனத்தில் ஈடுபட்டால், நான் உங்களை திருடன் என்று தான் கூறுவேன்.

இன்று நான் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். இதில் போக்குவரத்து கமிஷனர் கலந்துகொண்டார். நான் அவர்களிடம் குறிப்பிட்ட பிரச்சினையை 8 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்று கூறினேன். இல்லை எனில் சட்டத்தை கையில் எடுத்து உங்களை உதையுங்கள் என்று மக்களிடம் சொல்வேன். நீதி வழங்காத எந்த அமைப்பையும் தூக்கி எறிய வேண்டும் என எனது ஆசிரியர் கற்றுக்கொடுத்துள்ளார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல முறை சர்ச்சை பேச்சுகளை பேசி வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.