மக்களுக்காக பணியாற்றுவேன்…. ஒரு குடும்பத்துக்காக அல்ல….முதல்வர் நிதிஷ் குமார் கடும் விமர்சனம்....

காங்கிரஸ் கட்சியையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்த, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “ மக்கள் என்னை தேர்வு செய்தது மக்கள் பணியாற்றத்தான், ஒரு குடும்பத்துக்காக அல்ல. மதச்சார்பின்மையை பயன்படுத்தி சிலர் தங்கள் பாவங்களை மறைக்கிறார்கள்’’ என்று கடுமையாக விமர்சித்தார்.

பீகாரில் கடந்த 20 மாதங்களாக ஆட்சியில் இருந்த மகா கூட்டணியில் இருந்துவௌியேறிய நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது-

எனக்கு கொடுக்கப்பட்ட கடமை என்பது, மக்களுக்கு ேசவை செய்வதுதான். அதில் லாபமடைவதற்கு அல்ல. மக்கள் நீதிமன்றமே மிகப் பெரியது. அவர்களுக்கு பணியாற்றுவது என் கடமை.ஆனால், நான் ஒரு குடும்பத்தின் நலனுக்காக பணியாற்றமாட்டேன்.

மதச்சார்பின்மை குறித்து சிலர் பேசுகிறார்கள்(லாலுபிரசாத்) மதச்சார்பின்மை குறித்து சிலர் எனக்கு கற்றுக்கொடுக்க கூடாது. மதச்சார்பின்மை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், சிலரோ பாவங்களைச் செய்துவிட்டு, மதச்சார்பின்மைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

நான் துரோகி என்று சிலர்  பேசுகிறார்கள்(தேஜஸ்வி யாதவ்). கூட்டணி தர்மத்தை நான் மதித்து நடந்ததால்தான், அரசை தொடர்ந்து நடத்த முயற்சித்தேன். மக்களுக்கு சேவையாற்ற எண்ணிணேன்். நான் கேட்கிறேன். தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது, அவர் இது குறித்து விளக்கம் அளிக்கும் நிலையில் கூட இல்லை.

ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பாதை வேறாக இருக்கிறது என்பதால் தொடரந்து என்னால் அரசை இயக்குவது கடினமாகும். அதனால்தான் மாநிலத்தின் நலன் கருதியும், வளர்ச்சி கருதியும் நான் இந்த முடிவை  எடுத்தேன். இப்போது பீகாரிலும், மத்தியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடந்து வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி புதிய உயரத்தை அடையும்.

சிலர் இன்னும் மாயத் தோற்றத்திலும், அகந்தையிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து ஒரு கண்ணாடி காட்டப்பட்டு உண்மைச்சூழல் தௌிவுபடுத்தப்படும்

இவ்வாறு அவர் பேசினார்.