இதில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதியை அதிகப்படுத்தும் திட்டங்களுக்கும், ரூ.10 ஆயிரம் கோடி கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளை கட்டுவதற்கும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு இரு முக்கியமான அறிவிப்புகளை கடந்த வாரங்களில் அறிவித்தது. அதில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டங்களும், வங்கியை சீரமைக்க ரூ.70 ஆயிரம் கோடியும் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைத்து வங்கிச்சீருத்தம் செய்தது. இப்போது மூன்றாவது கட்ட பொருளாதார வளர்ச்சித் தி்ட்டங்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆஸ்ட் மாதம் ஏற்றுமதி 6.05 சதவீதமாகக் குறைந்து, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது, மேலும், ரியல் எஸ்டேட் துறையும் கடுமையான அழுத்தத்தில் சி்க்கி இருக்கிறது. இரு துறைகளையும் கைதூக்கி விடும் வகையில் , ஊக்கப்படுத்தும் வகையில் இன்று திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறுகையில், “நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார சிக்கலில் இருந்து நாடு மீண்டு வருகிறது. ரிசர்வ் வங்கி அறிவித்தபடி வட்டி குறைப்பு நடவடிக்கைகைளை மற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை 19-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்துகிறோம். உற்பத்தி துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பணவீக்கம் மிகவும் குறைவாக 4 சதவீதத்துக்குள் கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் பெருமளவு பயன்பெறும்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க ஆறு அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஜவுளி உட்பட ஏற்றுமதி பொருட்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை அதிகரிக்க ரூ.50 ஆயிரம் கோடி சலுகைத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மூலம் ரூ.45 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரீபண்ட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏற்றுமதி கடன் உறுதி கழகம் விரிவுபடுத்தப்படும். ஏற்றுமதி பொருட்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கப்படும். வர்த்தக கடன்களை போலவே வீட்டுக்கடனுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படும். நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடு கட்டும் திட்டத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

நாடுமுழுவதும் பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு கடன் உதவி அளிக்கும் நோக்கத்துடன் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. நடுத்தர வருவாய் பிரிவு வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவியை சிறப்பு திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் 3.5 லட்சம் வீடுவாங்குவோர் பயன் பெறுவார்கள்.

பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பேசி வருகிறோம் எனத் தெரிவித்தார்