Nirmala Devi lured girl students with saree-Chudidar
பேராசிரியை நிர்மலாதேவி, அழகான ஏழை மாணவிகளுக்கு சேலை, சுடிதார் வாங்கிக் கொடுத்து பாசத்தைக் காட்டி அவர்களை மயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவங்கர் கல்லூரி துணை பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகள் 4 பேரை, பாலியலுக்கு வற்புறுத்திய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். நிர்மலா தேவியிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. நிர்மலா தேவியின் செக்ஸ் வேட்டை பற்றியும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிபில் சேர்ந்த நிர்மலா, அதனை மதுரை பல்கலைக்கழகத்துக்கு மாற்றி, அங்கு வைத்தே ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, காமராஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்த தனது முன்னாள் கல்லூரி தோழர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக 2 பேராசிரியர்கள், அதிகாரி ஒருவருடனும், நிர்மலா தேவிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த நிர்மலா தேவிக்கு பல்கலைக்கழக தங்கும் விடுதியிலேயே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது பல்கலைக்கழக அதிகாரிகள் பலர் நிர்மலா தேவியை சந்தித்து பேசியுள்ளனர். அந்த நேரத்தில்தான் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் நிலை அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர், நிர்மலா தேவியிடம் முனைவர் பட்ட வழிகாட்டி மற்றும் பதிவாளர் பதவியை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.

இதற்கு விலையாக, மாணவிகளை கேட்டுள்ளார் அந்த அதிகாரி. இதன் பின்னரே மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்துள்ளார் நிர்மலா தேவி. இது தொடர்பாக நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில், தேவைக்கேற்ப தன்னிடம் பணம் இருந்தும் பதவி ஆசையாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். தேவாங்கர் கல்லூரியில் 3 கோஷ்டியினர் செயல்பட்டு வருவதாகவும், அதில் ஒரு கோஷ்டியினர்தான், தன்னை சிக்கவைத்து விட்டதாகவும் விசாரணையில் கூறியுள்ளார். பல முறை மாணவிகளிடம் போனில் பேசி இருக்கிறேன். ஆனால், இப்போது வேண்டுமென்றே, நான் பேசிய ஆடியோவை வெளியிட்டு விட்டனர் என்று நிர்மலா கூறியுள்ளார்.
அழகான ஏழை மாணவிகள் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தைக் கொட்டியுள்ளார் நிர்மலா. அவர்களிடம் நன்றாக பேசி குடும்ப சூழலை
தெரிந்து கொண்டு அதுபோன்றே மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தையும் அவரே கட்டியுள்ளார். தனது சொகுசு காரில் மாணவிகள் சிலரை மதுரைக்கு ஷாப்பிங் அழைத்துச் சென்றும் ஆசைகாட்டி உள்ளார் நிர்மலா தேவி.

சேலை, சுடிதார் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து மயக்கி உள்ளார். தங்கள் மீது கொண்ட அன்பால்தான், பேராசிரியை அன்பளிப்பு வழங்கி வருவதாக மாணவிகள் நினைத்துள்ளனர். ஆனால், மாணவிகளின் இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நிர்மலா தேவி திட்டம் தீட்டியுள்ளார். இது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. நிர்மலாவின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன? பின்னணியில் யார் யார் உள்ளனர்? என்பது குறித்த தகவல்கள் இனி ஒவ்வொன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
