புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் இன்று முதல் கடற்கரை காலை 5 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே திறந்திருக்கும். அதன் பிறகு மூடப்படும். இரவு 8 மணி வரை ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடலாம். பிறகு பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். புதுச்சேரியில் தினமும் ஊரடங்கு இரவு 10 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். மார்க்கெட்டில் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடக்கூடாது. 
தொற்று அதிகமாக உள்ளதால் ஆலோசனை நடத்தி வழிபாடு தலங்கள் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அவசர கால மருந்து தேவை என்று முன்னாள் முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. புதுச்சேரியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் கிளினிக் உள்ளது. கொரோனா  நோயாளிகளுக்கான படுக்கைவசதி 2,325 இருந்தது. தற்போது அதில் 1398 காலியாக உள்ளது. ஆக்ஸிஜன் கூடிய படுக்கை 970இல் 625 காலியாக உள்ளது. வீட்டில் 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகளில் தங்க இயலாதவர்களுக்காக கோவிட் கேர்  மையம் தொடங்கியுள்ளோம். எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.  தமிழகத்தை போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று தமிழசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.